கோவில் ரத வீதிகளில் மேயர் சரவணன் ஆய்வு

நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் மேயர் சரவணன் ஆய்வு நடத்தினார்.

Update: 2022-06-10 22:40 GMT

நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா ஜூலை மாதம் 11-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி ரத வீதிகளில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் தேர் ரத வீதிகளை சுற்றி வருவதில் சிரமம் ஏற்படும். எனவே ரத வீதிகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து மேயர் பி.எம்.சரவணன் நெல்லைப்ப்பர் கோவில் 4 ரத வீதிகளையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களை உடனடியாக செப்பனிட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் தேரோட்ட விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் வாகன நிறுத்த இட வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர பொறியாளர் அசோகன், நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் ராமகிருஷ்ணன், உதவி ஆணையாளர் (பொறுப்பு) பைஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி நேரத்தில் அமர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதைப்பயன்படுத்தும் விதமாக பணி நேரம் முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலையை தவிர்க்கும் பொருட்டு அனைத்து நிறுவனங்களிலும் இருக்கை வசதி செய்யப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளதா? என மேயர் பி.எம்.சரவணன் நேற்று தனியார் நிறுவனம் மற்றும் கடைகளில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது வியாபாரிகள் சங்க நிர்வாகி குணசேகரன் உள்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்