பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் செங்கல் கட்டுமான அமைப்பு கண்டுபிடிப்பு

சிவகளையில் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் செங்கல் கட்டுமான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-06-06 15:20 GMT

ஏரல்:

சிவகளையில் நடந்து வரும் தொல்லியல் அகழாய்வு பணியில் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் சங்க கால செங்கல் கட்டுமான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வு பணி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகளை பரும்பு, ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீபராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு ஆகிய பகுதிகளில் 18 இடங்களில் குழிகள் தோண்டி அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறியும் வகையில் ஸ்ரீபராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு ஆகிய பகுதிகளிலும், முன்னோர்களின் உடல்களை அடக்கம் செய்த இடங்களை கண்டறியும் வகையில் சிவகளை பரும்பு, ஸ்ரீமூலக்கரை ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடைபெறுகிறது.

தொல்லியல்பொருட்கள்

சிவகளை பரும்பு, ஸ்ரீமூலக்கரை பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வில் 35 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. ஸ்ரீபராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த அகழாய்வில் நடந்த ஆய்வுப்பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், தக்களி சாதனம், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசி மணிகள் வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக்கருவிகள், முத்திரைகள் உள்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செங்கல் கட்டுமானம்

இதற்கிடையில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள ஒரு செங்கல் 25 செண்டி மீட்டர் நீளமும், 16 செண்டி மீட்டர் அகலமும், 5 செண்டி மீட்டர் உயரமும் உள்ளது.

கடந்த வருடம் இதே பகுதியில் நடந்த அகழாய்வு பணியில் இதே போல் செங்கல் கட்டுமான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அறிக்கை சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த போது, இந்த செங்கல்கட்டுமானத்தில் நன்னீர் பாய்ந்தோடியதற்கான அடையாளம் இருப்பதாக தெரிவித்தார். எனவே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த செங்கல் கட்டுமான அமைப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்