கவுந்தப்பாடி அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிவிவசாயிகள் சாலைமறியல்

கவுந்தப்பாடி அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-09-02 20:10 GMT

கவுந்தப்பாடி அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

கவுந்தப்பாடி-சத்தி ரோட்டில் உள்ள நீர்வள ஆதாரத்துறை அலுவலகம் முன்பு நேற்று அந்த பகுதியை சேர்ந்த கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கூறும்போது, 'கவுந்தப்பாடி-சத்தி ரோட்டில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால் மூலம் தென்காட்டுபாளையம், காட்டுப்பாளையம், ஆவாரங்காட்டூர், பாப்பாங்காட்டூர், சின்னியம்பாளையம், சின்னாக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 260 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காலை ஆக்கிரமித்து திருமண மண்டபம், தனியார் பள்ளிக்கூட சுற்றுச்சுவர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் 24 அடி அகலமுள்ள வாய்க்காலில் தற்போது 8 அடி மட்டும் உள்ளது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை விளைநிலங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனே கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

நடவடிக்கை

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் கூறும்போது, 'உடனே கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் கவுந்தப்பாடி-சத்தி ரோட்டில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்