மாவட்டத்தில்பொங்கல் பரிசு தொகுப்பு 98 சதவீதம் வினியோகம்

தேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு 98 சதவீதம் பேருக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-19 18:45 GMT

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் பணி கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 872 பேர் பொங்கல் பரிசு பெற தகுதியான பயனாளிகள் என்று பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடந்தது. அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் 517 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு, ரூ.1,000 வழங்கும் பணிகள் தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து அவற்றை வாங்கிச் சென்றனர்.

98 சதவீதம் வினியோகம்

பொங்கல் பண்டிகை முடிந்தபின்னரும், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1,000 வழங்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று வரை மாவட்டத்தில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 125 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 98 சதவீதம் ஆகும். மாவட்டத்தில் இதுவரை ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.41 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த பயனாளிகளில் இன்னும் 8 ஆயிரத்து 747 பேர் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பெறாமல் உள்ளனர். விடுபட்டவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்