பர்கூர் மலைப்பகுதியில்பலத்த மழையால் சேதமடைந்த ரோடுகள்
பர்கூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் சேதமடைந்தன. பாறைகளில் திடீர் அருவிகள் உருவானது.
பர்கூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் ரோடுகள் சேதமடைந்தன. பாறைகளில் திடீர் அருவிகள் உருவானது.
கனமழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் நேற்று மாலை 3.30 மணியிலிருந்து 4.30 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. ஒரு மணி நேரம் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்தியூர், தவுட்டுப்பாளையம், பிரம்மதேசம் பிரிவு பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. சில கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்றன. தேங்கியிருந்த தண்ணீர் வடிய சுமார் 2 மணி நேரம் ஆனது.
திடீர் அருவிகள்
இதேபோல் பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரை கிராமத்தில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் சீறிப்பாய்ந்தது. இதன்காரணமாக பல இடங்களில் தார் சாலைகள் சேதம் அடைந்தன.
இதேபோல் பர்கூர் மலைப்பாதையில் பாறைகளில் ஆங்காங்கே அருவிபோல் தண்ணீர் கொட்டியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாறைகளில் உருவான திடீர் அருவிகளை பார்த்து ரசித்தனர். சிலர் செல்போன்களில் படம் பிடித்தனர்.
சோலாரில்...
ஈரோடு அடுத்துள்ள சோலாரில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வெயில் வாட்டி எடுத்தது. இந்தநிலையில் மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் நிற்காமல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் ஆறுபோல் ஓடியது.
வெண்டிபாளையம், கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாைல கனமழை பெய்தது. காலையில் இருந்து மாலை வரை வெயில் வாட்டி எடுத்தாலும் அதன்பின்னர் பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சி படுத்தியது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதியில் மதியம் 3.30 மணியளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறி சுமார் 45 நிமிடம் கொட்டித்தீர்த்தது.
மழை பெய்யும்போது சூறைக்காற்றும் வீசியது. இதனால் சின்னப்பள்ளம் என்ற இடத்தில் ரோட்டு ஓரம் இருந்த புளியமரம் ஒரு வீட்டின் மீது முறிந்து விழுந்தது. இதில் அருகே இருந்த மின்கம்பமும் உடைந்து விழுந்தது. நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
இதேபோல் அந்தோணி என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் ரோட்டோரம் இருந்த புளியமரம் விழுந்தது. இதில் கொட்டகை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உள்ளே கட்டிப்போட்டிருந்த மாடுகள் உயிர் தப்பின. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் கே,.சி.கருப்பணன் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.மேகநாதன் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகரன், பேரூர் கழக செயலாளர் எஸ்.மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கொடுமுடி
கொடுமுடி, சாலைப்புதூர், ஒத்தக்கடை, தாமரைப்பாளையம், கரட்டாம்பாளையம், வெங்கம்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5.45 மணி முதல் சுமார் ½ மணி நேரம் பலத்த மழை கொட்டியது.
ஊஞ்சலூர், கொளத்துப்பாளையம், கொளாநல்லி, கருக்கம்பாளையம், கொம்பனைப்புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையில் சுமார் ½ மணி நேரம் மிதமான மழை பெய்தது.
தாளவாடி
தாளவாடி, ஒசூர், பாரதிபுரம், கும்டாபுரம், தொட்டகாஜனூர், சிக்கள்ளி தலமலை, திம்பம், ஆசனூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் 30 நிமிடங்கள் வரை இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதனால் தொட்டமுதிகரை, கல்மண்டிபுரம், ஏரகனள்ளி, ஜீர்கள்ளி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.