வங்கி காவலாளி கொலை வழக்கில்12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சத்தி கோர்ட்டில் சரண்

கோர்ட்டில் சரண்

Update: 2023-02-17 20:34 GMT

வங்கி காவலாளி கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் சத்தியமங்கலம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

காவலாளி கொலை

திருப்பூர் மாவட்டம் ஆலந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காவலாளியாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பண்ணன் (வயது 57) என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது 3 பேர் கொண்ட குழுவினர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு சென்று வங்கி முன் கதவை உடைத்துள்ளனர்.

இதனால் அலாரம் சத்தம் கேட்டு தடுக்க கருப்பண்ணன் அங்கு சென்றார். அப்போது அந்த 3 பேரும் சேர்ந்து காவலாளி கருப்பண்ணனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள். பின்னர் அவரை மழைநீர் தொட்டிக்குள் போட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.

தலைமறைவாக இருந்தவர் சரண்

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொப்பம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக். கோவிந்தன், குமார் ஆகிய 3 பேர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்கு பதிவு செய்து சேவூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதில் கார்த்திக் என்பவர் ஜாமீனில் வெளியே வந்து பின் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் கடந்த 12 ஆண்டுகளாக ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருந்து உள்ளார்.

இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தன்னை போலீசார் தேடுவதை அறிந்த கார்த்திக் நேற்று சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வக்கீல் ஏ.சிவக்குமார் மூலம் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரை சிறைக்கு அனுப்ப நீதிபதி பொன்வேந்தன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்