ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 120 ஆண்டுகளுக்கு பிறகு தங்க காதணி கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 120 ஆண்டுகளுக்கு பிறகு தங்க காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-30 15:47 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 120 ஆண்டுகளுக்கு பிறகு தங்கத்தாலான காதணி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்்.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது அங்கு அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை அங்கேயே பத்திரப்படுத்தி இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இந்த பணியை திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இங்கு கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் அகழாய்வு பணியில் 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தங்க காதணி

இதுவரை வெண்கலம் மற்றும் தங்கம் கிடைக்கவில்லை என்பது பெரும் குறையாக இருந்தது. இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் 'சி சைட்' எனப்படும் பகுதியில் நேற்று தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் பழங்கால தங்க காதணி கிடைத்து உள்ளது. இதனால் தொல்லியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் கூறியதாவது:-

3 ஆயிரம் ஆண்டுகள்

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வு அறிக்கையில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆதிச்சநல்லூர் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள தங்க காதணி மூலமும் அது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தங்கத்தை ஆய்வு செய்தபோது 20 காரட் தங்கம் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனுடன் செம்பு சேர்த்து இருப்பதும் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 1902-ம் ஆண்டு இங்கு அலெக்சாண்டர் இரியா அகழாய்வு செய்தபோது, தங்கத்தாலான நெற்றி பட்டையம் கிடைத்தது. தற்போது அந்த இடத்தில் 30 செ.மீ. ஆழத்தில் தங்க காதணி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சுமார் 120 ஆண்டுகளுக்கு பிறகு தங்க ஆபரணம் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

தாசில்தார் பார்வை

இந்த ஆய்வு பணியில் தொல்லியல் ஆய்வாளர் யத்தீஸ்குமார், பொறியாளர்கள் ராஜன், கலைச்செல்வன், ஆய்வு மாணவர்கள் அருண்குமார், குமரேசன், மணிகண்டன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

ஆதிச்சநல்லூரில் தங்கம் கிடைத்த தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர்.

-----------------

Tags:    

மேலும் செய்திகள்