தஞ்சையில் அனல்காற்றுடன் மக்களை சுட்டெரித்த வெயில்
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தஞ்சையில் அனல் காற்றுடன் மக்களை சுட்டெரித்து வரும் வெயில் 100 டிகிரியை கடந்து கொளுத்தியது.
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தஞ்சையில் அனல் காற்றுடன் மக்களை சுட்டெரித்து வரும் வெயில் 100 டிகிரியை கடந்து கொளுத்தியது.
அக்னி நட்சத்திரம்
தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி நிறைவடைந்தது. இந்த 25 நாட்களும் கத்திரி வெயில் காலத்தில் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியகதிர்கள் சுட்டெரித்தன.
பொதுவாகவே அக்னி நட்சத்திர காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.
அக்னி நட்சத்திரம் முடிந்ததும் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடிந்தபிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
அனல் காற்று
இந்த நிலையில் தஞ்சையில் நேற்றுபகலில் வெயில் 100 டிகிரியை கடந்து கொளுத்தியது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அனல்காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையில் நடந்து சென்றவர்கள் பலர் குடையைபிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது.
அதேநேரத்தில் சில ஆண்கள் தலையில் துண்டை போர்த்தியபடியும், பெண்கள் சேலை முந்தானையாலும், துண்டாலும் தலையை மூடியபடி சென்றதை காணமுடிந்தது. அக்னிநட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பழக்கடைகளில் கூட்டம்
மேலும், தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வெயிலின் பிடியில் சிக்கி தவித்தனர். கோவிலுக்கு வந்த பெரும்பாலானவர்கள் நிழல் இருக்கும் இடத்தில் அமர்ந்து இளைப்பாறினர். வெயிலினால் கோவில் வளாகத்தில் உள்ள புற்களை பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணியும் நடந்தது.
கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணி பழம், நுங்கு வாங்கி சாப்பிட்டனர்.இதனால் பழக்கடைகளில் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதேபோல குளிர்ச்சி தரக்கூடிய, தாகத்தை தணிக்க கூடிய இளநீர், பழச்சாறு வகைகள், கரும்பு சாறு உள்ளிட்ட ஜூஸ்வகைகளையும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி அருந்தினர்.