தெற்கு ஆத்தூரில்கிட்டங்கியில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
தெற்கு ஆத்தூரில் கிட்டங்கியில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஆத்தூர்:
தெற்கு ஆத்தூரில் தனியார் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது ெசய்யப்பட்டனர்.
போலீசார் சோதனை
தெற்கு ஆத்தூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன் ஆலோசனையின் பேரில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் தனிப்படையினர் ஆத்தூர், தெற்கு ஆத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
4 பேர் சிக்கினர்
அப்போது தெற்கு ஆத்தூரில் உள்ள தனியார் கிட்டங்கி முன்பு 4 பேர் சந்தேகப்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடமுயன்றனர்.
போலீசார் அந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கொற்கை மணலூர் சுடலை முத்து மகன்களான ஜெயமுருகன் (வயது 46), மாரிமுத்து (39), பொன்ராஜ் (35), ஏரல் முதலியார் தெரு சுப்பிரமணியன் மகன் கணேசன் (46) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அந்த தனியார் கிட்டங்கியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
அந்த கிட்டங்கியில் போலீசார் சோதனை நடத்தியதில், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 61 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த புகையிலை பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் ஆகும். மேலும் புகையிலை பொருட்களை விற்று வைத்திருந்த ரூ.53 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமுருகன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.