சத்தியமங்கலத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி

Update: 2022-06-27 16:45 GMT

சத்தியமங்கலத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

ஏலச்சீட்டு

சத்தியமங்கலம் இந்திரா நகரை சேர்ந்த மயிலாத்தாள் (வயது 60), 20-க்கும் மேற்பட்டோருடன் வந்து, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி வருவதாக என்னிடம் கூறினார்கள். அதனால் நான் அவர்கள் நடத்தும் ரூ.1 லட்சம், ரூ.60 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 ஏலச்சீட்டுகளில் சேர்ந்து, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரத்து 500 செலுத்தினேன். 20 மாத தவணையும் நிறைவடைந்து ஏலச்சீட்டு தொகையை கேட்டபோது அந்த தம்பதியினர், 'எனது மகன் படிப்பு செலவுக்கு எடுத்து செலுத்தி விட்டேன். சில நாட்களில் பணம் தருகிறேன்' என்று கூறினர்.

ரூ.2 கோடி

மேலும், அவர்கள் தனது மகன் ஆஸ்திரேலியா நாட்டில் இருப்பதாகவும், அவருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் தேவைப்படுவதால் அதனை கடனாக கொடுக்கும்படியும் என்னிடம் கூறினார்கள். அதனால் நான் அந்த தொகையையும் கொடுத்தேன்.

இதேபோல், என்னிடம் மட்டும் அல்லாமல் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. கடந்த 18-ந் தேதி அன்று அந்த தம்பதியினர் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து கொண்டு இருந்தனர். அப்போது பணத்தை கேட்டதற்கு பணத்தை திரும்ப தர முடியாது எனகூறி மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். எனவே, என்னிடமும், என்னைப்போல 30-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி வரை மோசடி செய்த தம்பதியினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்