புன்னகாயலில் வரலாற்று அருங்காட்சியகம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

புன்னகாயலில் வரலாற்று அருங்காட்சியகம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-07-17 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூரை அடுத்துள்ள மீனவ கிராமமான புன்னக்காயலில் தமிழ் அச்சுக்கூடம் 1586- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாக, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்துள்ளனர். அதன்படி தமிழ் அச்சு கூடம் ஆதாரங்களை காட்சிப்படுத்துவதற்காக வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி பயிற்சி பாசறை ஆகியவற்றுக்காந கட்டிட அடிக்கல் நாட்டு விழா புன்னக்காயலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் எடிசன் பன்னான்டோ தலைமை தாங்கினார். பங்குத்தந்தை சகாய அந்தோணி டைட்டஸ் அடிகளார் முன்னிலை விகித்தார். மூத்த அருட்பணியாளர் அமுதன் அடிகளார் ஜெபம் செய்து அடிக்கல்லை ஆசீர்வதித்து நட்டு வைத்தார். மேலும் ஏழு கடல் துறை என்று அழைக்கப்படும் வேம்பார், சிப்பிக்குளம், தூத்துக்குடி, பழைய காயல், புன்னை காயல், வீரபாண்டியன் பட்னம், அமலிபுரம், ஆலந்தலை, மனப்பாடு, மற்றும் தூத்துக்குடி பரதநலச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் அடிக்கல்களை தொடர்ந்து நாட்டினர். தமிழ் ஆராய்ச்சியாளர் நெய்தல் அன்றோ, மாவட்டத்தில் உள்ள பங்குத்தந்தைகள், புன்னக்காயல் கோவில் கமிட்டி தலைவர் அந்தோணிசாமி, புதிய ஆலய கட்டிட கமிட்டி தலைவர் ராஜ் பெர்னான்டோ, ஊர் வளர்ச்சி குழு தலைவர் ரூபன் பர்னான்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புன்னக்காயல் ராஜா கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1586-ஆம் ஆண்டு முதல் அச்சு கூடத்தை புன்னைக்காயலில் நிறுவிய அருட் பணியாளர் ஹென்றிக்ஸ் அடிகளார் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆழி புத்திரன் தாமஸ் புன்னக்காயலில் அச்சுக்கூடம் இருந்ததற்கான தொல்லியியல் ஆதாரங்களை பற்றி பேசினார். அங்கு தமிழ் அச்சு கூடம் முதன் முதலில் அமைக்கப்பட்ட தகவல்களை முதல்-அமைச்சர் மற்றும் தொல்லியல் துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்