தமிழகம் முழுவதும் குளங்களில் மீன் ஏலத்துக்கு தடை விதிக்கலாமா?-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

தமிழகத்தில் உள்ள குளங்களில் மீன்களை ஏலம் விடுவதற்கு தடை விதிக்கலாமா? என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-06-12 20:50 GMT


தமிழகத்தில் உள்ள குளங்களில் மீன்களை ஏலம் விடுவதற்கு தடை விதிக்கலாமா? என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குளங்களில் மீன் ஏலம்

தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூர் கிராம ஊராட்சி தலைவர் செல்வி இளையராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உடையாளூர் அருகே உள்ள லட்சுமிநாராயண பெருமாள் கோவில் பகுதியில் 5 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அதில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக ஏல அறிவிப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் வெளியிட்டுள்ளார். இது சட்டவிரோதம். இந்த ஏல அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீர் பயன்பாடு

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஜமீல் அரசு, ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி நீர்நிலைகளை வணிக நோக்கத்தில் குத்தகைக்கு விடுவதால் பல்வேறு சிக்கல்களை கிராமத்தினர் சந்திக்கின்றனர். எனவே இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினர்.

இதையடுத்து நீதிபதிகள், முன்பெல்லாம் கிராமங்களில் ஒரு குளத்தின் நீரை மக்களின் குடிநீராகவும், மற்றொரு குளத்தின் நீரை கால்நடைகளுக்காகவும் பயன்படுத்தினர். தற்போது கால்நடைகளை மினரல் வாட்டரில் குளிப்பாட்டும் நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல், குளங்களில் வணிக நோக்கில் மீன் வளர்க்கப்பட்டு, மீன்கள் ஏலம் விடப்படுகின்றன.

இவ்வாறு மீன் ஏலம் எடுத்தவர்கள் குளத்தில் சில வேதியியல் பொருட்களை கலந்து விடுகின்றனர். தண்ணீரையும் மாசுபடுத்துகின்றனர். இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

தடை விதிக்கலாமா?

விசாரணை முடிவில், உடையாளூர் கிராமத்தில் உள்ள 5 குளங்களில் மீன்பிடி ஏல அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தமிழகம் முழுவதும், குளங்களில் வணிக நோக்கில் மீன்பிடி ஏலத்துக்கு தடை விதிக்கலாமா? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்