பெருந்துறையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 4 பேர் விழுப்புரத்தில் கைது

4 பேர் விழுப்புரத்தில் கைது

Update: 2022-09-24 21:07 GMT

பெருந்துறையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 4 பேரை போலீசார் விழுப்புரத்தில் கைது செய்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர்

பெருந்துறை பஸ் நிலையம் அருகே உள்ள ராஜ வீதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 55). ரியல் எஸ்டேட் அதிபர். ஈரோட்டை சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவர் அய்யாசாமியின் நண்பர் ஆவார்.

இந்த நிலையில் அய்யாசாமி தனது தொழிலுக்கு தேவையான ரூ.12 லட்சத்தை வைத்தியலிங்கம் மூலமாக அவருக்குத் தெரிந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் இருந்து சில மாதங்களுக்கு முன்பு வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்த மாதம் அய்யாசாமி திருப்பி கொடுத்துள்ளார். ஆனால், பேசியபடி அய்யாசாமி வாங்கிய கடனை முறையாக திருப்பித் தரவில்லை எனத்தெரிகிறது.

கடத்தல்

இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரும், வைத்தியலிங்கமும் திருச்சி லால்குடியைச் சேர்ந்த ரவி (30), கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த மணி (30), பெரம்பலூர் மாவட்டம் கைக்காளத்தூரைச் சேர்ந்த பரஞ்ஜோதி (59) ஆகியோருடன் கடந்த 21-ந்தேதி பெருந்துறை சென்றனர். அப்போது அங்கு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அய்யாசாமியை காரில் கடத்திச் சென்று விட்டனர்.

இதுபற்றி அறிந்த அய்யாசாமியின் மகன் அரவிந்த் (26) பெருந்துறை போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தங்கதுரை ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

4 பேர் கைது

விசாரணையில் அய்யாசாமி கடத்தப்பட்டு விழுப்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை கடத்தல் கும்பல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரத்துக்கு சென்ற பெருந்துறை போலீசார் அங்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அய்யாசாமியை மீட்டனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் அவரை கடத்திச் சென்ற ரவி, மணி, வைத்தியலிங்கம், பரஞ்ஜோதி ஆகிய 4 பேரை விழுப்புரத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான பாஸ்கரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் ஈரோடு 3-ம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்