பெருந்துறை வட்டாரத்தில், வண்டுகளால் பாதித்ததென்னந்தோப்புகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
பெருந்துறை வட்டாரத்தில், வண்டுகளால் பாதித்த தென்னந்தோப்புகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டம் சார்பில் பெருந்துறை வட்டாரத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள், வேளாண்மை விஞ்ஞானிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு வேளாண்மை துறை உதவி இயக்குனர் சி.சசிகலா தலைமை தாங்கினார். இந்த சோதனை குறித்து அவர் கூறியதாவது:-
பெருந்துறை வட்டாரத்துக்குட்பட்ட கம்புளியம்பட்டி, கருமாண்டிசெல்லிபாளையம் கிராமங்களில் தென்னந்தோப்புகளில் உள்ள தென்னை மரங்கள் அதிக அளவில் பூச்சி நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து வேளாண்மை ஆராய்ச்சி நிலைய நோய் இயல் துறை பேராசிரியர் சுந்தரவன மற்றும் வேளாண்மை துறையினர் சம்பந்தப்பட்ட தென்னை தோப்புகளில் சோதனை செய்தோம்.
இங்கு தென்னையில் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, கருந்தலைப்புழு, ரூகோஸ் வெள்ளை ஈ, செதில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக காணப்பட்டது. அதை கட்டுப்படுத்தும் வகையில் காய்ந்த மரங்கள், பட்டுப்போன மரங்களை அகற்றி அழிக்கவும், தென்னந்தோப்புகளை சுத்தமாக பராமரிக்கவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வண்டு முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும் கூறப்பட்டது. மழைக்காலங்களில் இனக்கவர்ச்சி பொறிகள் அமைக்கவும், ஒட்டுண்ணிகள் பயன்படுத்தவும் விளக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தென்னை மரங்களில் மணலுடன் வேப்பங்கொட்டை பொடி கலந்த கலவையை மட்டை இடுக்குகளில் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
உரமேலாண்மை, நுண்ணூட்ட சத்துகளின் பற்றாக்குறையால் ஏற்படும் அறிகுறிகள் குறித்தும் அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.