பரமன்குறிச்சியில் மின்வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்

பரமன்குறிச்சியில் மின்வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-14 18:45 GMT

உடன்குடி:

பரமன்குறிச்சி அருகே தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளதை கண்டித்தும், சீரான மின்வினியோகம் செய்யக் கோரியும் நேற்று மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

மின்வாரிய அலுவலகம் முற்றுகை

உடன்குடி யூனியன் பரமன்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட என்.எஸ்.கே.தெரு, சிங்கராயர்புரம் உள்ளிட்ட பகுதியில் தொடர்மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியத்தினரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த பெண்கள், மாநில இந்து முன்னணி துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் தொடர் மின்வெட்டை கண்டித்து நேற்று காலையில் பரமன்குறிச்சி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கள் பகுதியில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடையை நீக்க கோரியும், சீரான மின்வினியோகம் செய்ய வலியுறுத்தியும் பெண்கள் கோஷம் எழுப்பினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த பரமன்குறிச்சி உதவி மின்பொறியாளர் ராதிகா, போர்மேன் கருப்பசாமி ஆகியோர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் மிகவும் பாதிப்பு அடைவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கூறி மின்வாரியத்தினரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்தடை பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என பெண்கள் உறுதிபடக்கூறினர்.

ேபாலீஸ் துணை சூப்பிரண்டு உறுதி

இதை தொடர்ந்து திருச்செந்துர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் துணை சூப்பிரண்டு உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்