பாலமேடு பகுதியில் பச்சை மொச்சைக்காய் சீசன் தொடக்கம் -கிலோ ரூ.60-க்கு விற்பனை

பாலமேடு பகுதியில் பச்சை மொச்சைக்காய் சீசன் தொடங்கியது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது.

Update: 2022-12-28 20:52 GMT

அலங்காநல்லூர்,


பாலமேடு பகுதியில் பச்சை மொச்சைக்காய் சீசன் தொடங்கியது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது.

பச்சை மொச்சைக்காய்

பாலமேடு பகுதியில் உள்ள சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, பாரைப்பட்டி, கோடாங்கிபட்டி, சரந்தாங்கி, முடுவார்பட்டி, ஆதனூர், தேவசரி, மாணிக்கம்பட்டி, வலையபட்டி, மறவபட்டி, ராஜக்காள்பட்டி, லக்கம்பட்டி, சாத்தியார் அணை, எர்ரம்பட்டி, அய்யூர், கோவில்பட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில், மானாவாரியாக நாட்டுமொச்சையை ஏற்கனவே ஆடிப்பட்டத்தில் பயிரிட்டு இருந்தனர்.

அவ்வப்போது பெய்த மழையின் ஈரத்தினால் மொச்சை செடிகள் செழிப்பாக வளர்ச்சி அடைந்து பூவும், பிஞ்சுமாகி தற்போது காயாகி அறுவடைக்கு தயாராகி வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டுமொச்சைக்காய் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது. ஒரு கிலோ ரூ.60-க்கு பாலமேடு பஸ் நிலைய சந்தைகளில் விற்பனை ஆகிறது.

அறுவடை சீசன்

இதுகுறித்து விவசாயி மறவபட்டி மாரிசெல்வம் கூறியதாவது:- இந்த வருடம் நாட்டுமொச்சை விதைப்பு செய்த நாள் முதல் கடந்த 6 மாதமாக அவ்வப்போது பெய்த பருவமழையினால் மொச்சை நல்ல விளைச்சல் பெற்றுள்ளது. தற்போது அறுவடையும் தொடங்கி விட்டது. பாலமேடு பகுதி நாட்டு மொச்சைக்காய் குளம்பு வைத்தால் நல்ல கமகம என வாசமாக இருக்கும். நல்ல ருசியும் நிறைந்தது.

மதுரை மாவட்டத்திலே பாலமேடு பச்சை மொச்சைக்காய்க்கு எப்போதும் தனி கிராக்கி தான். தைப்பொங்கல் வரும் முன்பாகவே இந்த மொச்சை அறுவடை சீசன் ஆண்டுதோறும் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்