தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில்போதை பொருட்கள் குறித்து85 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் போதை பொருட்கள் குறித்து 85 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்தெரிவித்தார்.
ஓரு வருடத்தில் மாற்றத்தை தேடி நிகழ்ச்சி மூலம் போதை பொருள் தடுப்பு குறித்து 85 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய 'மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனால் தொடங்கப்பட்டு நேற்று முன்தினம் ஓராண்டு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் குழந்தை தெரசம்மாள் ஆலய திருமலர் மண்டபத்தில் வைத்து 'மாற்றத்தை தேடி" எனும் சமூக விழப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.
85 ஆயிரம் பேர்
அப்போது, 'மாற்றத்தை தேடி" சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஆண்டு இதே நாளில் கருங்குளம் கிராமத்தில் தொடங்கப்பட்டது. நேற்று முன்தினத்துடன் ஓராண்டு நிறைவு பெற்று உள்ளது. இதில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், அதற்கென இருக்கும் போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடை சட்டம் குறித்தும், சாலை விபத்துகள், சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்தும், இணையதள சைபர் குற்றங்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு குறித்தும், அந்தந்த போலீஸ்நிலைய அதிகாரிகள் அவர்களுடைய எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த மாற்றத்தை தேடி நிகழ்ச்சி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றங்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும். இதுவரை 2 ஆயிரத்து 937 மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 85 ஆயிரத்து 737 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தனியாக சட்டம் உள்ளது. அதை பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதர வழிவகை உள்ளது. எனவே பெண்கள், குழந்தைகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை வருங்காலங்களில் நல்ல தொழில் வளர்ச்சி மாவட்டமாக இருக்கும். எனவே உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். இதன் மூலம் அரசு வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடும், அவைகளை நோக்கி நல்ல பயணத்தின் விதையாகத்தான் இந்த மாற்றத்தை தேடி நிகழ்ச்சியானது காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் எந்த பிரச்சனையும் இன்றி நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். இளைஞர்கள் இந்த வயதிலேயே உங்களை கட்டுப்படுத்தி நல்ல வழியில் செல்ல வேண்டும். இதன் மூலம் உங்கள் எதிர்காலம் சிறந்து விளங்கும் என்று கூறினார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இரவு ரோந்து
மேலும் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அவர் ஆங்காங்கே பணியில் இருந்த போலீசார் உஷாராக ரோந்து செல்கிறார்களா? என்பதை ஆய்வு செய்தார். போதைப்பொருள் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான பணிகளில் போலீசார் விழிப்பாக செயல்படுகிறார்களா? என ஆய்வு செய்தார். இரவில் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். மேலும் தேவையில்லாமல் இரவு நேரங்களில் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்களை அறிவுறுத்தினார். ஆய்வின் போது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழரசன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.