நாகையில், விற்பனைக்கு குவிந்த ரோஜா பூக்கள்
காதலர் தினத்தையொட்டி நாகையில் விற்பனைக்கு ரோஜா பூக்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒரு ரோஜா பூ ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காதலர் தினத்தையொட்டி நாகையில் விற்பனைக்கு ரோஜா பூக்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒரு ரோஜா பூ ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காதலர் தினம்
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட்டுகள் மற்றும் பரிசு பொருட்களை வாங்கி பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள்.
இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன்கள் மூலமும் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாலும், நேரில் சென்று ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகளை கொடுத்து வாழ்த்துவது தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ரோஜா பூக்கள்
இதனால் ஆண்டுதோறும் காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களுக்கு மவுசு இருக்கும். இந்த நிலையில் நாகை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேதாஜி பூ மார்க்கெட்டில் ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்டு, பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையில் பனிப்பொழிவால், வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக ரோஜா பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.
ரூ.25-க்கு விற்பனை
இதனால் ரூ.10-க்கு விற்ற ஒரு ரோஜா ரூ.25-க்கு விற்கப்படுகிறது. மேலும் 10 ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கொத்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.