மேட்டூரில் போலீசிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற 2 ரவுடிகள் கால்முறிந்து படுகாயம்ஆஸ்பத்திரியில் அனுமதி
மேட்டூரில் போலீசிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற 2 ரவுடிகள் கால் முறிந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேட்டூர்,
பணம் கேட்டு மிரட்டல்
மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி வெண்ணிலா. நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும், மருமகள் சுகந்தியும் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அப்போது அவர்களின் வீட்டுக்கு பிரபல ரவுடியான லல்லு என்கிற லல்லு பிரசாந்த் (வயது 30), அவருடைய மனைவி கோமதி மற்றொரு ரவுடியான விஜய் என்ற வெள்ளையன் (27) ஆகிய 3 பேரும் வந்தனர்.
அவர்கள் 3 பேரும், வெண்ணிலாவை மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் மருமகன் ராஜேஷை கொலை செய்தது போல் உங்களையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.மேலும் ராஜாவின் கழுத்தில் லல்லு வீச்சரிவாளை வைத்து மிரட்டினார். விஜய் எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார். இதே போன்று லல்லுவின் மனைவி கோமதியும் அவர்கள் 3 பேரையும் மிரட்டி உள்ளார். மேலும் ராஜாவின் பாக்கெட்டில் இருந்த ரூ.1,000-த்தை பறித்து கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
தப்பி செல்ல முயன்றனர்
இது ெதாடர்பாக வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில், கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லல்லுவின் மனைவி கோமதியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட லல்லு மற்றும் விஜய் என்ற வெள்ளையனை கருமலைக்கூடல் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் மேட்டூர் மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் லல்லு மற்றும் விஜய் ஆகிய இருவரும் சென்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்டனர். போலீசாரை கண்டு பயந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் இருந்து அவர்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
படுகாயம்
இதில் லல்லுவிற்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விஜய் என்கிற வெள்ளையனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கருமலைக்கூடல் போலீசார் அவா்கள் இருவரையும் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லல்லு மீது 3 கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்கு 9 வழிப்பறி வழக்குகள், அடிதடி வழக்குகள் உள்பட 30 வழக்குகள் உள்ளன. இதேபோன்று விஜய் என்கிற வெள்ளையன் மீது ஒரு கொலை வழக்கு 4 வழிப்பறி வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.