மதுரை மண்டலத்தில் கடந்த 6 மாதங்களில்ரேஷன் அரிசி கடத்திய 772 பேர் கைது; 4,621 டன் பறிமுதல்
மதுரை மண்டலத்தில் மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக 772 பேர் கைது செய்யப்பட்டு, 4621 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்தில் மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக 772 பேர் கைது செய்யப்பட்டு, 4621 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல்
மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறைக்கு உட்பட்ட மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து வாகனச் சோதனை மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், ரேஷன் அரிசி அரவை ஆலைகள் ஆகியவற்றில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
மதுரை மண்டல சூப்பிரண்டு புஹியா சினேகப்பிரியா தலைமையில், விருதுநகர், நெல்லை சரக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கூட்டு முயற்சியில் 2023 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மதுரை மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் மொத்தம் 835 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய 772 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி 4621.55 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
117 சிலிண்டர்கள்
மேலும், சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பொது வினியோகத் திட்ட மண்ணெண்ணெய் சுமார் 14 லிட்டர் மற்றும் சிலிண்டர்களை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தியதற்காக 117 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோல், கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்கள் 161, மூன்று சக்கர வாகனங்கள் 14, இரண்டு சக்கர வாகனங்கள் 91, மற்ற வாகனம் 2 ஆக மொத்தம் 268 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை நடப்பு ஆண்டில் சுமார் 334-க்கும் மேற்பட்ட வழக்குகள் மாவட்ட வருவாய் அலுவலக நீதிமன்றத்திலும், குற்றவியல் நீதிமன்றத்திலும் தண்டனையில் முடிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத 106 பேர் மீது பிடிவராண்டு நிறைவேற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 93 பேரில் 37 நபர்களுக்கு ஆர்.டி.ஓ.விடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.