கும்பகோணத்தில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்

கும்பகோணத்தில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்

Update: 2023-05-26 19:46 GMT

கொத்தனாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கும்பகோணத்தில் அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொத்தனார் கொலை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் தனபால் (வயது 32). கொத்தனார். நேற்றுமுன்தினம் மாலை இவர் நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் தனபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனபாலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவிடைமருதூர் போலீசார் தனபால் உடலை கைப்பற்றி கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தனபாலை வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சாலைமறியல்

நேற்று காலை தனபாலின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு வந்து தனபாலை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்வதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்