அரசின் புதிய உத்தரவுபடி குமரி மாவட்டத்தில் குழித்துறை, திருவட்டார் கல்வி மாவட்டங்கள் நீக்கம்
அரசின் புதிய உத்தரவுபடி குமரி மாவட்டத்தில் குழித்துறை, திருவட்டார் கல்வி மாவட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில்,
அரசின் உத்தரவுபடி குமரி மாவட்டத்தில் குழித்துறை, திருவட்டார் கல்வி மாவட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அதே சமயத்தில் கூடுதலாக 2 அதிகாரிகள் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளன.
கல்வி மாவட்டம் குறைப்பு
தமிழகத்தில் 500 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு கல்வி மாவட்ட அதிகாரி என்ற அடிப்படையில் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் கல்வி மாவட்ட அலுவலகங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கு என்று தனியாக ஒரு கல்வி மாவட்ட அதிகாரி பணியிடமும், தனியார் பள்ளிகளுக்கென ஒரு கல்வி மாவட்ட அதிகாரி பணியிடமும் உருவாக்கப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியின் கீழ் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் என கல்வி மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. அரசின் புதிய உத்தரவுப்படி நாகர்கோவில், தக்கலை ஆகிய 2 கல்வி மாவட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது. குழித்துறை, திருவட்டார் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
2 அதிகாரிகள் பணியிடம் உருவாக்கம்
மேலும் தொடக்க பள்ளிகளுக்கு ஒரு கல்வி மாவட்ட அதிகாரி பணியிடமும், தனியார் பள்ளிகளுக்கு ஒரு கல்வி மாவட்ட அதிகாரி பணியிடமும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி குமரி மாவட்டத்தில் 4 கல்வி மாவட்ட அதிகாரிகள் இருப்பார்கள். கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வும் சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் குமரிமாவட்டத்தைச் சேர்ந்த கல்வி மாவட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். அதனால் ஒன்றிரண்டு அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.