குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் தேர்பவனி
குலசேகரன்பட்டினத்தில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் தேர்பவனி நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, அம்மன் தேரில் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபட்டனர்.
முத்தாரம்மன் கோவில்
திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 2மணிக்கு உச்சிகால பூஜையுடன், மதியம் 2.30 மணிக்கு நடை திருக்காப்பிடுதல் நடைபெற்றது.
சொக்கப்பனை
மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மாலை 5.30 மணிக்கு சாய்ராட்சைபூஜையும், இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. இரவு 9.30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சொக்கப்பனையில் பாதி எரிந்த கட்டைகளை பக்தர்கள் சேகரித்து வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
அம்மன் தேர்பவனி
பின்னர் அம்மன் தேர்பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.