கோவில்பட்டி பகுதியில் பழைய பள்ளி, பஞ்சாயத்து கட்டிடங்களை இடிக்க நிதி ஒதுக்கீடு

கோவில்பட்டி பகுதியில் பழைய பள்ளி, பஞ்சாயத்து கட்டிடங்களை இடிக்க யூனியன் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-14 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன் மற்றும் யூனியன் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முடுக்குமீண்டான்பட்டி, சிவந்திபட்டி, சிந்தலக்கரை, லிங்கம்பட்டி, மூப்பன்பட்டி, நாலாட்டின் புத்தூர், சின்ன மலை குன்று, இனாம் மணியாச்சி, திட்டங்குளம், ஆவல் நத்தம், சுரைக்காய் பட்டி, செமப்புதூர், வில்லிசேரி ஆகிய பஞ்சாயத்துக்களில் உள்ள பழைய சத்துணவு கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், சுகாதார வளாகம், ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை தொட்டி ஆகியவற்றை இடிப்பதற்கு பஞ்சாயத்து யூனியன் பொது நிதி யிலிருந்து ரூ.15 லட்சத்து 61ஆயிரம் அனுமதி அளிக்கப்பட்டது.

கடலையூர், கீழ ஈரால் மற்றும் வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்ட தற்காலிக மஸ்தூர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 400 அனுமதிப்பது உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்