கோவில்பட்டியில்ரூ.2.07 கோடியில் புதிய மாணவர் விடுதி திறப்பு

கோவில்பட்டியில் ரூ.2.07 கோடியில் புதிய மாணவர் விடுதி திறக்கப்பட்டது.

Update: 2023-08-10 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் ரூ.2.07 கோடி மதிப்பில் அரசு கல்லூரியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியை நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விடுதி வளாகத்தில் நடந்த விழாவில் கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி விடுதியை பார்வையிட்டார். விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.விக்னேஷ்வரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கி. கங்கா பரமேஸ்வரி, உதவி பொறியாளர் வி.சந்திரசேகரன், அரசு கல்லூரி முதல்வர் கி. நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், கோவில்பட்டி நகரசபை பகுதிகளில் இயங்கும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சட்ட விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் கா.கருணாநிதி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலட்சுமி, நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் இளங்கோவன், நகரசபை ஆணையாளர் ஆர்.கமலா ஆகியோர் பேசினா். பயிற்சியாளர்கள் ராகுல் ராஜ், ரிச்சர்ட் ஜோசப், ஷீபா செல்வி ஆகியோர் பாதுகாப்பான முறையில் கழிவுநீர் அகற்றுவது குறித்து பயிற்சி அளித்தனர். கூட்டத்தில், நகரசபை அலுவலக மேலாளர் கிருஷ்ணராஜன், சுகாதார ஆய்வாளர்கள் காஜா நஜிமுதீன், கண்ணன், ஆரியங்காவு ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்