காயல்பட்டினத்தில் பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலைமறியலால் பரபரப்பு

காயல்பட்டினத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை நள்ளிரவில் திடீர் சாலைமறியலால் பரபரப்பு நிலவியது.

Update: 2023-06-16 18:45 GMT

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இளம்பெண்ணை கேலி, கிண்டல் செய்ததுடன், பிரியாணி கடையை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம்பெண்ணை கேலி, கிண்டல்

காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சேக் முகமது மகன் முகமது இஸ்மாயில் (வயது 23).

இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினம் கடற்கரைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுமுகநேரியை சேர்ந்த 3 பேர் முகமதுஇஸ்மாயில் மனைவியை ஆபாசமாக பேசி கேலி, கிண்டல் செய்தவாறு வந்துள்ளனர். அந்த 3 பேரும் எல்லைமீறி சென்றநிலையில், காயல்பட்டினம் பஜாரில் உள்ள ஓட்டல் அருகே வந்தபோது, அவர்களை முகமது இஸ்மாயில் தட்டிக்கேட்டுள்ளார்.

பிரியாணி கடையை நொறுக்கிய கும்பல்

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இஸ்மாயில் அண்ணன் அபூபக்கர் சித்திக்கும் அந்த இடத்திற்கு சென்று ரகளை செய்தவர்களை கண்டித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் இரவு 9 மணியளவில் காயல்பட்டினம் புதிய பஸ்நிலையம் அருகே அபூபக்கர் சித்திக் பிரியாணி கடையில் இருந்துள்ளார். அப்போது ஏற்கனவை தகராறு செய்து விட்டு சென்ற 3 பேருடன், மேலும் 5 பேர் தனித்தனி மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளனர். அந்த 8 பேரும் பிரியாணி கடையை அடித்து நொறுக்கியதுடன், அபுபக்கர் சித்திக்கையும் சரமாரியாக தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் பறித்து கொண்டு தப்பி ெசன்று விட்டனர்.

பொதுமக்கள் சாலைமறியல்

இந்த சம்பவத்தை கண்டித்து காயல்பட்டினம் புதியபஸ் நிலையம் அருகே பொதுமக்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். ஓட்டலை சேதப்படுத்தியதுடன், அபூபக்கர் சித்திக்கை தாக்கியவர்கள் மீதும் முகமது இஸ்மாயில் அவரது மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர்களையும் கைது செய்ய கோரி இந்த போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காயல்பட்டினம்- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்த் ராஜன், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஆறுமுகநேரி சப்- இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் வழக்கு

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவுசெய்து ஆறுமுகநேரி ராஜமன்யபுரம் ஞான அபிநாஸ்(20), சுப்ரமணியபுரம் அருள்ராஜ் மகன் சார்லஸ் சாமுவேல்( 26), அவரது சகோதரர் அபிஷேக்(21), ராஜமன்யபுரம் அந்தோணி ராஜ் மகன் நவீன்(21),காமராஜபுரம் எபி மகன் முத்துராஜ் மற்றும் வடக்கு சுப்பிரமணியபுரம் சவேரியான் மகன் ஷாஜின்(21) ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாஜின் என்பவர் தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் முகமது இஸ்மாயில், அபூபக்கர் சித்திக் ஆகிய 2பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆறுமுகநேரி போலீசார் காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்களுக்கு இடையூறாக பஸ் மறியலில் ஈடுபட்டதாக 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்