கரூரில், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
கரூரில், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கல்வி துறையில் நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டு வருவதால் ஒரு சிலர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல கூடிய நிலை உள்ளது. எனவே பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கலந்தாய்வை முறையாக நடத்த வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கரூர் முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொது செயலாளர் பொன்ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.