கரூரில், தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
கரூரில், தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகை திருட்டு
கரூர் தாந்தோணிமலை கிழக்கு முத்தலாடம்பட்டி அம்மன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் முருகன் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர். மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த முருகன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் அலமாரியில் வைத்திருந்த 6¾ பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.