கரூரில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
கரூரில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது.
கரூரில் கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர். அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து கொண்டு சோதனையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
பின்னர் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கரூருக்கு வருகை தந்தனர். இதனைத்தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புடன் 27-ந்தேதி முதல் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கரூரில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஒரு அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.