குருவரெட்டியூர் பகுதியில் 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
குருவரெட்டியூர் பகுதியில் 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே பாலமலை வனச்சரகத்தையொட்டி அமைந்துள்ளது குருவரெட்டியூர். இந்த பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் தனது தோட்டத்தில் கால்நடைகளுக்கு தேவையான சோளத்தட்டையை பயிர் செய்துள்ளார்.
தற்போது அறுவடைக்கு தயாராக இருப்பதால் கூலி ஆட்கள் வைத்து சோளத்தட்டையை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது சோள தட்டைகளுக்கு இடையே மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை கண்டதும், கூலித் தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னம்பட்டி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை பாதுகாப்பாக சென்னம்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.