கூடலூரில் வனப்பகுதியில் மாயமான 2 சிறுவர்களை 'டிரோன்' மூலம் தேடும் பணி தீவிரம்

கூடலூர் அருகே வனப்பகுதியில் மாயமான 2 சிறுவர்களை ‘டிரோன்' மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

Update: 2023-09-01 18:45 GMT

கேளக்கொல்லி  வனப்பகுதியில் டிரோன் மூலம் போலீசார், வனத்துறையினர் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

கூடலூர்: கூடலூர் அருகே வனப்பகுதியில் மாயமான 2 சிறுவர்களை 'டிரோன்' மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

2 சிறுவர்கள் மாயம்

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த ஆதிவாசி தம்பதி கடந்த மாதம் 28-ம் தேதி தேன் எடுப்பதற்காக முதுமலை வனத்துக்குள் சென்றனர். அப்போது அவர்கள் தங்களது 5 வயது மகன், 10 வயது மகள் ஆகியோரை உறவினர்களிடம் விட்டுச்சென்றனர். இதையடுத்து மறுநாள் தம்பதியின் பிள்ளைகளான 2 சிறுவர்களையும் திடீரென காணவில்லை.

இதனால் 2 சிறுவர்களையும், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி ஆதிவாசி மக்கள் பல இடங்களுக்கு சென்று தேடினர். ஆனால் 2 நாட்களாகியும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கூடலூர் போலீசார், முதுமலை வனத்துறையினருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கொடுக்கப்பட்டது.இதுகுறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் பெற்றோர் தேன் எடுக்க முதுமலை வனப்பகுதிக்குள் சென்றதால் அவர்களை தேடி 2 சிறுவர்களும் வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என போலீசார், வனத்துறையினர் சந்தேகித்தனர்.இதனால் அவர்கள், சிறுவர்களை வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை.இந்த நிலையில் நேற்று காலை கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் 55 பேர் 6 பிரிவுகளாக பிரிந்து காலை 7 மணி முதல் முதுமலை வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

'டிரோன்' மூலம் தேடும் பணி

அதன்படி அவர்கள் தொரப்பள்ளி, போஸ்பாரா, கோழிக்கண்டி, கேளக்கொல்லி உள்பட பல்வேறு வனப்பகுதிகளில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் டிரோன் மூலமும் வனப்பகுதியில் சுமார் 8 கி.மீ தூரம் வானில் பறக்கவிட்டு தேடும் பணி நடைபெற்றது. ஆனாலும் 2 சிறுவர்களின் நடமாட்டமோ, அவர்களை பற்றிய எந்த தடயமும் தென்படவில்லை. இதனால் போலீசார், வனத்துறையினர் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். இதனிடையே வனப்பகுதியில் சுமார் 4 கி.மீ. தொலைவில் ஒரு நீரோடையின் கரையோரம் விறகுகளை வைத்து யாரோ தீ மூட்டிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் விறகுகளை வைத்து தீமூட்டியது யார்? என தெரிய வில்லை. தொடர்ந்து 2 சிறுவர்களையும் தேடும் பணி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பின்னர் இரவானதும் தேடும் பணி கைவிடப்பட்டது. அடுத்த நாள் மீண்டும் தேடும் பணி நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கூடலூர் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் காணாமல் போன 2 சிறுவர்களின் உறவினர்களை சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். தொடர்ந்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். இந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்