அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு காலாவதி மருந்துகள் வினியோகமா?:மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு காலாவதி மருந்துகள் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு காலாவதி மருந்துகள் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது மத்திய சுகாதார குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய சுகாதார குழு வருகை
மத்திய அரசு தேசிய சுகாதார குழுமம் மூலம் நாடு முழுவதும் சுகாதார திட்டங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளதா, அந்த திட்டங்கள் மக்களை சென்றடைந்து உள்ளதா, உபகரணங்கள் முழுமையாக வாங்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய சுகாதார குழுமத்தை சேர்ந்த குழுவினர் தூத்துக்குடிக்கு வந்தனர்.
இந்த குழுவில் மத்திய சுகாதார குழுமத்தை சேர்ந்த டாக்டர் நிர்மல்ஜோ, பேராசிரியர் நந்தினி சுப்பையா, அரவிந்த்குமார் பாண்டியன், ஆனந்த் யாதவ், ஷாசி இக்பால், பிராச்சி சிங், மோனிகா தாலேகாங்கர், சுரபி சேதி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
ஆய்வு
இந்த குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், கோவங்காடு, வேப்பலோடை, மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையங்கள், தூத்துக்குடி கணேஷ்நகர், திரேஸ்புரம் நகர்நல மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மருந்து கழக குடோனிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு பயன்படுகிறதா? என்பது குறித்து நோயாளிகளுடன் கலந்துரையாடினர். ஆஸ்பத்திரிகளில் திட்டமிடப்பட்ட அனைத்து பணிகளும் முறையாக முடிக்கப்பட்டு உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்கள், மருந்து குடோனில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதா? காலாவதியான மருந்துகள் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அலுவலர்களுடன் குழுவினர் கலந்துரையாடினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, மாநில மக்களை தேடி மருத்துவம் திட்ட முதன்மை அலுவலர் மதுசூதனன், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், துணை இயக்குனர் (காசநோய்) சுந்தரலிங்கம், தூத்துக்குடி மாநகர நல அலுவலர் அருண்குமார், அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ்ஜெயமணி, உதவி அலுவலர் சூரியபிரபா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.