தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-08-26 00:15 IST

காத்திருப்பு போராட்டம்

சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில், தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்காக சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர்.

கோஷங்கள்

அங்கு காலை 10 மணியளவில் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் பிரசாத்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் குபேந்திரசெல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட தலைவர் உடையாளி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்