கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்றவரால் பரபரப்பு
கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலகத்திற்குள் நேற்று மாலை ஒரு நபர் உள்ளே நுழைய முயன்றார். அவரை நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்ததாக அவர் கூறினார். ஆனால் பாதுகாப்பு பணி போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அவர் திடீரென வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் திருமயம் அருகே கள்ளுக்குடியிருப்பை சேர்ந்த சின்ன கருப்பன் என்பது தெரியவந்தது. மேலும் குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும், குடிநீர் கலங்கலாக வருவதாகவும் இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க அறிவுறுத்தி அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.