ஈரோடு கிழக்கு தொகுதியில்உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 10 சதவீதம் ஒப்படைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 10 சதவீதம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ளது. தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையில் நடத்திட போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் துப்பாக்கியை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் (பிஸ்டல்) 110, இரட்டை குழல் துப்பாக்கி 100, ஒற்றை குழல் மற்றும் ரைபிள் துப்பாக்கி 85 என மொத்தம் 295 துப்பாக்கிகள் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டிருந்தார். இதனால் வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக துப்பாக்கிகளை பெற போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிகளை அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களிலோ அல்லது தனியார் ஆயுதக்கிடங்கிலோ ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். தேர்தல் நடத்தை விதிமுறை நிறைவுக்கு பின் துப்பாக்கிகளை உரிய ரசீது காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது வரை 10 சதவீதம் பேர் மட்டுமே துப்பாக்கியை ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.