ஈரோடு மாவட்டத்தில் 21,678 டன் உரங்கள் இருப்பு; மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 21,678 டன் உரங்கள் இருப்பு இருப்பதாக மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொிவித்தாா்..
ஈரோடு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 678 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
விவசாய பணிகள்
கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் மானாவாரி நிலங்களில் வேளாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்களில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் விவசாய பணிகளுக்கான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக தற்போது வரை 229.84 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. அணையில் 16.76 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையம்
நடப்பு ஆண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வினியோகிப்பதற்காக 88.45 டன் நெல் விதைகளும், 11.2 டன் சிறுதானியங்களும், 10.161 டன் பயறுவகைகளும், 19.679 டன் எண்ணெய் வித்துக்களும் உள்ளன.
மேலும் விவசாய பணிகளுக்கு தேவையான ரசாயன உரங்களான யூரியா 5,364 டன்னும், டி.எ.பி. 3,078 டன்னும், பொட்டாஷ் 1,156 டன்னும், காம்ப்ளக்ஸ் 12,080 டன்னும் என மொத்தம் 21 ஆயிரத்து 678 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் போதுமான அளவு உள்ளது. மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் சார்பில் வைராபாளையம், கணபதிபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையங்களில் தங்களுடைய நெல் மூட்டைகளை விற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.