ஈரோடு மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்; மாணவ-மாணவிகளின் நலன் காக்க பெற்றோர் வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் மாணவ-மாணவிகளின் நலன் காக்க, பழுதடைந்த பழைய பள்ளிக்கூட கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-10-16 21:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் மாணவ-மாணவிகளின் நலன் காக்க, பழுதடைந்த பழைய பள்ளிக்கூட கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அழியாத செல்வம்

'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு' என்றார் தெய்வப்புலவர்

திருவள்ளுவர்.

கண்போல் மனிதனுக்கு மிக முக்கியமான எண்ணையும், எழுத்தையும் கற்றுத்தருவது கல்வி. அந்த கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்று அரும்பாடுபட்டு பட்டி தொட்டி எல்லாம் பள்ளிகளை திறந்தவர் காமராஜர். பசியோடு குழந்தைகள் பாடம் கற்க வந்தால் படாதபாடு படுவார்கள் என்று மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார். அது பின்னர் சத்துணவு திட்டமாக மாறியது. தற்போது மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் வகையில் திட்டம் வளர்ந்து விட்டது. அதில் குறை ஏதும் காண முடியாது. ஆனால் மாணவ-மாணவிகள் அமர்ந்து கல்வி கற்கும் வகுப்பறை கட்டிடங்கள் அனைத்துமே உறுதித்தன்மையுடன், நல்ல வசதிகளுடன் உள்ளதா? என்றால் இல்லை என்று உடனே கூறலாம்.

காலையில் பெற்றோர்களை பார்த்து புன்னகைத்துவிட்டு, அதே புன்னகையுடன் மாணவ-மாணவிகள் மாலையில் பெற்றோரை சந்திக்கவேண்டும் என்றால் பள்ளிக்கட்டிடங்கள் சிதிலமில்லாமல் சிறப்பாக இருக்க வேண்டும்.

பெற்றோரின் எதிர்பார்ப்பு

குளுகுளு வசதி செய்யப்பட்ட வகுப்பறை, வழுவழுப்பான தரைகள், உயர்தர நாற்காலிகள், வசதியாக எழுதும் பெஞ்சு என தனியார் பள்ளிகள் போட்டி போட்டு மாணவ-மாணவிகளை இழுத்து வருகிறார்கள். அவர்களிடம் அரசு பள்ளிகள் போட்டியிட முடியாது என்றாலும் வகுப்பறைகள் தரமாகவும், குறைந்தது மின்விசிறி வசதி, நல்ல தண்ணீர் வசதியுடன் கழிப்பறை இருந்தாலே போதும் என்பதுதான் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஆசை. அதுவே அவர்களின் பெற்றோரின் எதிர்பார்ப்பும்.

முறையான கட்டிட வசதி இல்லாத காரணத்தினாலேயே ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார்கள். ஏன் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளும் பெரும்பாலும் தனியார் பள்ளியையே நாடுகிறார்கள்.

அரசுபள்ளி மாணவர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சைக்கிள், மடிக்கணினி, பாடப்புத்தகம், நோட்டுபுத்தகம், இலவச பஸ்பாஸ், சீருடை வழங்கப்படுகிறது.

மேலும் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ -மாணவிகள் மருத்துவ துறையில் படிக்க 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. ஆனாலும் தரமான பள்ளிக்கட்டிடம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலையாய கடமை

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 1,732 அரசு தொடக்க பள்ளிக்கூடங்கள் உள்ளன. மேலும் 77 உயர்நிலை பள்ளிக்கூடங்களும், 111 மேல்நிலை பள்ளிக்கூடங்களும், 30 அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிக்கூடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவது அரசின் தலையாய கடமை ஆகும். மாணவ -மாணவிகளுக்கு தேவையான வகுப்பறைகள் அரசு பள்ளிக்கூடங்களில் உள்ளனவா?, பழைய கட்டிடமாக இருந்தால் அவற்றின் தரம் உறுதியாக இருக்கிறதா?, மாணவ -மாணவிகளுக்கு தேவையான கழிப்பறை வசதி இருக்கிறதா?, அனைத்து பள்ளிக்கூடங்களிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளதா? என்பதை அரசு உறுதி படுத்த வேண்டும். மேலும் மாணவ -மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று மாணவ -மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்