ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபட உள்ளனா் சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபடுகின்றனர். தற்போது சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு பணி
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சுதந்திர தினத்தன்று மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்துள்ளார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க வாகன சோதனையும், தங்கும் விடுதிகளில் சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி லட்சுமி நகர் சோதனைச்சாவடி, கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி, நொய்யல் ஆற்று சோதனைச்சாவடி, பண்ணாரி அம்மன் சோதனைச்சாவடி, பர்கூர் சோதனைச்சாவடி, தாளவாடி அருகே உள்ள தமிழக -கர்நாடகா எல்லைப்பகுதியில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி என மாவட்டம் முழுவதும் 13 சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
விடுதிகளில் சோதனை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 துணை கோட்டத்தில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் அந்தந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் விடுதியில் யார் யார் தங்கி உள்ளனர், அவர்கள் பெயர், முகவரி, பின்னணி குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தங்கும் விடுதி மேலாளர்களிடம் சந்தேகப்படும்படி யாரும் இருந்தால் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார்
சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, காளை மாட்டு சிலை, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, சுவஸ்திக் கார்னர் மற்றும் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
இதேபோல் ஈரோடு ரெயில் நிலையம் நுழைவுவாயில் பகுதியில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு நடைமேடையாக சென்று மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி காவிரிக்கரை ரெயில்வே தண்டவாள பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.