ஈரோடு மாநகராட்சியில்1,200 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சைஅதிகாரிகள் தகவல்

அதிகாரிகள் தகவல்

Update: 2023-04-17 22:11 GMT

ஈரோடு மாநகராட்சியில் 1,200 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்தடை சிகிச்சை

ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என்றும், கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் பலர் கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும், மாநகராட்சி நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனம் சார்பில் கருத்தடை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தெருநாய்கள் பிடிக்கப்பட்டு சோலாரில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது.

1,200 தெருநாய்கள்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கருத்தடை செய்யப்பட்டு 3 நாட்கள் பராமரிக்கப்படுகிறது. பிறகு எங்கிருந்து பிடிக்கப்பட்டதோ, அதே பகுதியில் மீண்டும் தெரு நாய்கள் கொண்டு சென்று விடப்படும். இதனால் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகமாகுவதை கட்டுப்படுத்த முடியும். ஈரோடு மாநகராட்சியில் 1,200 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது", என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்