ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-06-30 21:25 GMT

தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தீர்மானங்கள்

ஈரோடு மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை எடுத்து வைத்தனர்.

குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் இணைப்பு வழங்குவதற்கு வீடுகள், நிறுவனங்கள் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். இது ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்று இருந்ததை, இனி வரும் காலங்களில் 10 தவணையாக, 2 தவணைகளாக செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகம்

இதுதொடர்பாக விவாதம் செய்த கவுன்சிலர்கள் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சீர்படுத்தப்பட வேண்டும். எந்த ஒரு அனுமதியாக இருந்தாலும் அதை வழங்குவதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட பணியை முடிக்காத பணியாளர் அல்லது அதிகாரிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இனியும் கால தாமதம் செய்யாமல் மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கப்பட வேண்டும்.

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட இணைப்புக்கு கட்டணம் பெறுவது சரி. ஆனால், இந்த திட்டம் கடந்த ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வரப்பட்டது. புதிய அரசு பொறுப்பு ஏற்று 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வீடுகளுக்கு முழுமையாக இணைப்பு கொடுக்க முடியவில்லை. மாநகராட்சியில் வீட்டு வரி, குடிதண்ணீர் வரி குறைக்கப்பட வேண்டும். குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்கள்.

ஊராட்சிக்கோட்டை திட்டம்

அதற்கு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் பதில் அளிக்கும்போது, 'வீட்டு வரி உயர்வு என்பது கடந்த 2016-ம் ஆண்டு ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்து உறுதி செய்யப்பட்டது. எனவே அதை நாம் இப்போது குறைக்க வேண்டும் என்று கேட்க முடியாது.' என்றார்.

தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர் கே.சி.பி.நிர்மலாதேவி பேசும்போது, 'ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் எங்களது (அ.தி.மு.க.) ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி' என்றார். உடனடியாக தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து, 'ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் 2009-ம் ஆண்டு மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி அறிவித்த திட்டம். அதை தடுத்து நிறுத்தி வைத்தது அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா' என்றனர்.

அ.தி.மு.க.கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அந்த திட்டத்தை அ.தி.மு.க.வின் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அவர் தொடங்கி வைத்த திட்டத்தை தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்ற முடியவில்லை என்று கூறினார்கள். தி.மு.க. கவுன்சிலர்களும் விடாமல், அதுவும் நீங்கள் (அ.தி.மு.க.) நியமித்த ஒப்பந்ததாரர்களால்தான் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது என்றனர். இதனால் சிறிது நேரம் மாநகராட்சி மன்றம் பரபரப்பானது.

அப்போது மேயர் நாகரத்தினம் தலையிட்டு, ஊராட்சிக்கோட்டை திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் என்று முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று அறிவித்தார். அவருடன் கவுன்சிலர்கள் ஜெகதீசன், தங்கவேலு, நிர்மலாதேவி, ஹேமலதா, பாரதி ஆகியோர் வெளிநடப்பு செய்து விட்டு, திரும்பவும் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்