தேவதானப்பட்டியில்ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியிடம் வாக்குவாதம்

தேவதானப்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-10 18:45 GMT

தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு அங்கு சேமித்து வைக்கப்பட்டு 9 கண்மாய்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் மஞ்சளாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கெங்குவார்பட்டி புது தடுப்பணையில் இருந்து மத்துவார் குளம் கண்மாய், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதிக்கு செல்கிறது.

இந்த தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதிகளில் சிலர் தென்னை, எலுமிச்சை, இலவ மரங்களை வளர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கோா்ட்டு நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பெரியகுளம் மஞ்சளாறு அணை செயற்பொறியாளர் சவுந்தரம், உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அங்கு சாகுபடி செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற முயன்றனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்த சிலர் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் தேவதானப்பட்டி போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்