கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 10ரூபாய் நாணயத்துக்கு வந்த சோதனை வியாபாரிகள்- பொதுமக்கள் வாங்க மறுப்பதாக மாறி, மாறி குற்றச்சாட்டு

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 10ரூபாய் நாணயத்தை வியாபாரிகள்- பொதுமக்கள் வாங்க மறுப்பதாக மாறி, மாறி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2022-10-12 18:45 GMT

பண்டைய காலத்தில் ஒரு பொருளை வாங்குவதற்கு மற்றொரு பொருளை கொடுக்கும் வழக்கம் இருந்தது. நாளடைவில் செம்பு, வெள்ளி போன்ற நாணயங்கள் நடைமுறைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் புழக்கத்தில் வந்தது.

10 ரூபாய் நாணயங்கள்

மத்திய அரசு சார்பில், புதிய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் தயாரிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி மூலம் நாடு முழுவதும் புழக்கத்தில் விடப்படுகிறது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நாணயத்தை புழக்கத்தில் விட்டது.

இந்த நாணயம் அப்போது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஏனெனில் 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விட 10 ரூபாய் நோட்டுகளே மக்களின் கைகளில் அதிகம் தவழ்ந்து வந்தது. 10 ரூபாய் நோட்டுகள் கிழிந்தும், அழுக்குகள் படிந்தும் காணப்பட்டதால் 10 ரூபாய் நாணயத்துக்கு அதிகம் கிராக்கி இருந்தது.

இருப்பினும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்த 10 ரூபாய் நாணயத்தை முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கின்றனர். அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் இந்த 10 ரூபாய் நாணயங்களை ஆரம்பத்தில் வாங்கினாலும், தற்போது யாரும் வாங்க முன்வரவில்லை. நாளடைவில் 10 ரூபாய் நாணயங்களே செல்லாது என்பது போல் மக்களும், வியாபாரிகளும் நினைத்து விட்டார்கள். இதனால் கடைகள், பஸ்கள், ஏன், வங்கிகளில் கொடுத்தாலும் கூட வாங்குவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது.

சுற்றுலா தலங்கள்

சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம், செஞ்சி கோட்டை, கல்வராயன்மலை போன்ற சுற்றுலா தலங்களும், ஆன்மிக தலங்களும் மிகுந்து விளங்கும் இந்த 3 மாவட்டங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் தரும் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. இதனால் அவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே தகராறு தான் நடந்து வருகிறது.

பஸ் கண்டக்டர்களிடம் கொடுத்தாலும் அவர்களும் இது செல்லாது என்றே கூறி, வாங்க மறுத்து விடுகிறார்கள். இதனால் வெளியூர் பயணிகளுக்கும் கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதை பார்க்க முடிகிறது. 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்தும், அதை யாரும் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

கடைக்காரர்களிடம் கேட்டால், பொதுமக்களிடம் திருப்பி கொடுத்தால் அவர்கள் வாங்குவதில்லை. பிறகு அதை வாங்கி நாங்கள் என்ன செய்வது என்கிறார்கள். மக்களிடம் கேட்டால் கடைக்காரர்கள் வாங்குவதில்லை என்று ஒருவரையொருவர் மாறி,மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் நிரந்தர தீர்வு கண்டு, பொது மக்கள், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.

இதுபற்றி சிலரிடம் கருத்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

வாங்க தயார்...

கடலூர் ஆட்டோ டிரைவர் அறிவுக்கரசு:- 10 ரூபாய் நாணயங்களை நாங்கள் வாங்க தயார். ஆனால் நாங்கள் கொடுத்தால் மக்கள் வாங்க தயாராக இல்லை. இதற்கு வங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முதலில் பெட்ரோல் பங்க்குகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க ஆரம்பித்தால் அனைவரும் வாங்கி விடுவார்கள். இது பற்றி வர்த்தக சங்க நிர்வாகிகளிடமும் பேசி 10 ரூபாய் நாணயங்களை வாங்க வலியுறுத்தினால், சாமானிய மக்கள் வரை சென்றடையும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

விழுப்புரம் டி.கொசப்பாளையம் அய்யனார்:- ரிசர்வ் வங்கி விதியின்படி இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம், தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் வங்கிகள், வணிக நிறுவனங்கள், கடைகள், பஸ்கள், சுங்கச்சாவடிகள் போன்ற பல்வேறு இடங்களில் வாங்கப்படும்வதில்லை.

10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்காததால் ஒவ்வொரு வீடுகளிலும் அவை காட்சி பொருளாக இருக்கிறது. இந்த அவல நிலையை போக்க மத்திய, மாநில அரசுகள், வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மாவட்ட நிர்வாகம், தனது பங்கிற்கு வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி அனைவரிடமும் 10 ரூபாய் நாணயங்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து அவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மீண்டும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்திற்கு வந்து விடும்.

வாங்க மறுப்பு

கள்ளக்குறிச்சி செல்வராஜ்:- பூக்கடை, காய்கறி, மளிகை, பழக்கடை, பெட்டிக்கடை என எந்த கடைகளிலும் பொருட்கள் வாங்கும் போது 10 ரூபாய் நாணயங்களை கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர். அரசு பஸ்களில் செங்கல்பட்டு மாவட்டத்தை தாண்டி சென்னை கோயம்பேடு வரை 10 ரூபாய் நாணயங்களை வாங்குகின்றனர். அதேவேளையில் 10 ரூபாய் நாணயங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொடுக்கும் போது வாங்க மறுப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

புழக்கத்தில் இல்லை

கள்ளக்குறிச்சி பழக்கடைக்காரர் ரமேஷ்:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. எங்களை போன்ற சிறிய வியாபாரிகள் பெரிய வியாபாரிகளிடம் சரக்கு வாங்க 10 ரூபாய் நாணயங்களை கொடுக்கும்போது அவர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் கடைக்காரர்கள் பொதுமக்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. நாங்கள் கொடுத்தால் அவர்களும் வாங்குவதில்லை. 10 ரூபாய் நாணயங்களை அனைவரும் வாங்குவதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை தேவை

கச்சிராயப்பாளையம் மணிவேல்:- எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. 5 வங்கிகள் உள்ளது. ஆனால் நாங்கள் 10 ரூபாய் நாணயங்களை மிகவும் அபூர்வமாக தான் பார்த்து உள்ளோம். வங்கிகளில் மட்டும் வாங்கி கொள்கிறார்கள். அவர்களிடம் இருந்து யாரும் வாங்குவதில்லை. ஆகவே 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புரளியால் வாங்க மறுப்பு

திண்டிவனம் வியாபாரி முஸ்தபா:- திண்டிவனத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் பல இடங்களில் 10 ரூபாய் நாணயம் பொதுமக்களின் புழக்கத்தில் இல்லை. இதற்கு காரணம் வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்களை பெறுவதில்லை என பொதுவாக கூறப்படுகிறது. சிலர் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற புரளியால் வாங்க மறுக்கிறார்கள். இருந்த போதிலும் நான் 10 ரூபாய் நாணயங்களை பெற்று வருகிறேன். இதற்கு காரணம் நான் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி சென்னைக்கு செல்வதால் அங்கு தடை இன்றி செலவு செய்ய முடிகிறது.

நெல்லிக்குப்பம் அனைத்து தொழில் வர்த்தக சங்க செயலாளர் ஜே.ராமலிங்கம் :-

நெல்லிக்குப்பம் பகுதியில் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பத்து ரூபாய் நாணயம் வாங்குவதற்கு தயாராக உள்ளோம். எங்களிடம் உள்ள நாணயத்தை மக்களுக்கு வழங்கினால், அவர்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால், வணிகர்களிடம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை 10 ரூபாய் நாணயம் தேங்கி உள்ளது.

இதை முழுமையாக சரி செய்ய வேண்டுமானால் அரசுபஸ்களில் 10 ரூபாய் நாணயம் வாங்கினால் பொதுமக்களுக்கு அதன் மீது நம்பிக்கை வந்து வழக்கம் போல் புழக்கத்திற்கு வரும்.

Tags:    

மேலும் செய்திகள்