சென்னிமலையில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யாததை கண்டித்து சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சென்னிமலையில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யாததை கண்டித்து சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2022-08-22 21:25 GMT

சென்னிமலை

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 64). இவருக்கு சொந்தமான நிலம் சென்னிமலை பகுதியில் உள்ளது. சண்முகம் இந்த நிலத்தை சென்னிமலை பகுதியை சேர்ந்த 2 பேருக்கு விற்பனை செய்ய சென்னிமலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 3 மணி அளவில் பத்திரப்பதிவு செய்வதற்காக டோக்கன் பெற்றிருந்தார். ஆனால் இந்த நிலத்தின் மீது வில்லங்கம் இருப்பதாக கூறி சென்னிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பத்திரப்பதிவு செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என நிலத்தை விற்பவரும், வாங்குபவர்களும் கேட்டுள்ளனர். இதனிடையே மாலை 6 மணி அளவில் அலுவலகத்தில் இருந்து பணி முடிந்து சார்பதிவாளர் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரிடம் கூறுகையில், 'நிலத்தை பத்திரப்பதிவு செய்யாததுடன், அதற்கு முறையான காரணம் சொல்லாமல் சார்பதிவாளர் சென்றுவிட்டார். எங்களுக்கு முறையான காரணத்தை விளக்க வேண்டும்,' என்றனர். அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், 'நாளை (அதாவது இன்று செவ்வாய்க்கிழமை) சார்பதிவாளர் வந்தவுடன் பேசி தீர்வு காணலாம்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் இரவு 8 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்