சென்னையில் பாலியல் தொழில் போட்டியால் விபரீதம்; வாலிபரை கடத்தி கொலை செய்ய முயற்சி

சென்னையில் பாலியல் தொழில் போட்டியால் விபரீதம்; வாலிபரை கடத்தி வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து கொல்ல முயற்சியில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-08 11:24 GMT

கூடுவாஞ்சேரி:

ஊரப்பாக்கத்தில் பாலியல் தொழில் போட்டியில் வாலிபரை கடத்தி வீட்டில் அடைத்து வைத்து கொல்ல முயன்ற 3 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (20). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி சென்னைக்கு வந்தார். அப்போது பாலியல் தொழில் செய்யும் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர்.

பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இதையடுத்து சென்னை துரைப்பாக்கம், திருவான்மியூர் பகுதிகளில் பாலியல் தொழில் செய்யும் சல்மான் என்பவருடன் கோபாலகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து பாலியல் தொழில் செய்து வந்தார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரையும் பிரிந்தார்

கோபாலகிருஷ்ணன். இருவரும் தனித்தனியாக பிரிந்து, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தனர். மேலும், இந்த பாலியல் தொழிலுடன் வண்டலூர் அருகே கண்டிகையில் ஜூஸ் கடையும் சல்மான் நடத்தி வந்தார்.

இந்த நிலையில், இந்த ஜூஸ் கடைக்கு சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் வந்தார். சல்மானை சந்தித்தார். நீண்ட காலத்துக்கு பிறகு இருவரும் சந்தித்ததால் பழைய சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது சல்மான், 'தனியாக நீ தொழில் செய்வதை விட என்னுடன் வந்துவிடு. உனக்கு சகல வசதிகளையும் செய்து தருகிறேன்' என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அதற்கு கோபாலகிருஷ்ணன் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது சல்மானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தனது தொழிலுக்கு போட்டியாக இருக்கும் கோபால கிருஷ்ணனை எப்படியாவது தன்னுடன் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சல்மான் முடிவு செய்தார். அதற்கான திட்டத்தையும் வகுத்தார்.

அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது நண்பர்களான ராபின், சுரேஷ் ஆகியோர் மூலமாக கோபாலகிருஷ்ணனை ஊரப்பாக்கத்துக்கு கடத்தி வந்தார். பின்னர் ஊரப்பாக்கம், ராம் நகரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து சல்மான் கூட்டாளிகள் சித்ரவதை செய்தனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி, கோபாலகிருஷ்ணனை தீர்த்துக்கட்டும் முடிவில் தனது நண்பர்களான லிபின், அகில் ஆகியோரை வீட்டு காவலுக்கு உட்கார வைத்துவிட்டு, கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை எடுத்துவர சல்மான்,

சுரேஷ் ஆகியோர் சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, அவர்களிடம் இருந்து தப்பிக்க கோபாலகிருஷ்ணன் முற்பட்டார்.

நேற்று மாலை அறையின் ஜன்னல் வழியாக திடீரென அலறி கூச்சலிட்டுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூடினர். பரபரப்பு ஏற்பட்டது. உடனே கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராபின், லிபின், அகில் ஆகிய 3 பேரையும் மடக்கி பிடித்தனர். வீட்டின் அறை கதவை உடைத்து கோபாலகிருஷ்ணனை மீட்டு, காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

அப்போதுதான், இந்த சம்பவங்கள் அனைத்தும் தெரியவந்தது.

புகாரின்பேரில் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, ராபின் (26), லிபின் (27), அகில் (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்