வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்த வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி

2 அரசு பஸ்கள் ஜப்தி

Update: 2022-09-21 19:30 GMT

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் இறந்த வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

அரசு பஸ் ஜப்தி

கோபி அருகே உள்ள வினோபா நகர் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 47). விவசாயி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு வாணிபுத்தூர் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் முத்துசாமி மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் இறந்தார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் ரூ.25லட்சம் நஷ்டஈடு கேட்டு கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி ஜெகநாதன் பாதிக்கப்பட்ட முத்துசாமியின் குடும்பத்துக்கு போக்குவரத்து கழக நிர்வாகம் ரூ.12 லட்சத்து 41 ஆயிரத்து 27-யை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து நிர்வாகம் நஷ்டஈடு வழங்கவில்லை.

இதையடுத்து கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் நீதிபதி தயாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று கோபி பஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு கோவைக்கு செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர்.

மற்றொரு வழக்கில்...

இதேபோல் திருப்பூர் மாவட்டம் குட்டகம் பகுதியைச் சேர்ந்த டெய்லரான பெருமாள் (25) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி நம்பியூர் பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் பெருமாள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் ரூ.50லட்சம் நஷ்டஈடு கேட்டு கோபி 3-ம் வகுப்பு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி ஜெகநாதன் பாதிக்கப்பட்ட பெருமாளின் குடும்பத்துக்கு போக்குவரத்து கழகம் ரூ.21 லட்சத்து 49 ஆயிரத்து 900-யை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து நிர்வாகம் பணம் செலுத்தவில்லை. இதனால் கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் நிர்வாகம் பணம் கட்டவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நீதிபதி தயாநிதி அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் கோபி பஸ் நிலையத்துக்கு சென்று அங்கு ஈரோடு நோக்கி செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்