பவானியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதல்; இளம்பெண் சாவு

பவானியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-19 01:17 GMT

பவானி

பவானியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஸ்கூட்டர் மீது மோதியது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி லதா மணி (வயது 25). இவர் சொந்த வேலை விஷயமாக அந்தியூரில் இருந்து பவானிக்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.

பவானி அரசு மருத்துவமனை அருகே வந்தபோது அவருக்கு பின்னால் வந்த லாரி ஒன்று லதாமணியின் ஸ்கூட்டர் மீது மோதியது.

சாவு

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து லதாமணி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லதாமணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோரிக்கை

விபத்து நடந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'ஈரோடு மாவட்டத்தின் எல்லையான பர்கூர் மற்றும் அந்தியூர் பகுதியில் விபத்து ஏற்பட்டாலும், நெஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்பட்டாலும் அதில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும்.

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகிறது. மேலும் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதன்காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே உயிரிழப்பை தடுக்க பவானி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். மேலும் பவானி அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர திவீர சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட வேண்டும். இதற்கு சுகாதார துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்