பவானிசாகர் வனப்பகுதியில் காட்டெருமை தாக்கி வன ஊழியர் படுகாயம்
பவானிசாகர் வனப்பகுதியில் காட்டெருமை தாக்கி வன ஊழியர் படுகாயம் அடைந்தாா்.
புஞ்சைபுளியம்பட்டி
பவானிசாகர் வனச்சரகத்துக்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வருபவர் ரவிராஜ் (வயது38). இவரும் வேட்டை தடுப்பு காவலர் கார்த்தி (30) என்பவரும் நேற்று மாலை 5 மணி அளவில் சிங்கமலை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென வந்த காட்டெருமை வனக்காப்பாளர் ரவிராஜ் மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதில் ரவிராஜ் படுகாயம் அடைந்தார். இதைபார்த்த கார்த்தி காட்டெருமையை விரட்டிவிட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று ரவிராஜை வாகனத்தில் ஏற்றி ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.