நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும்பா.ஜனதா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்":தூத்துக்குடி பாதயாத்திரையில் அண்ணாமலை பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்” என்று தூத்துக்குடி பாதயாத்திரையில் அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2023-08-13 18:45 GMT

"தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை முறியடித்து நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்" என்று தூத்துக்குடி பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.

பாதயாத்திரை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அவர் நேற்று 27-வது தொகுதியாக தூத்துக்குடியில் பாதயாத்திரையை தொடங்கினார்.

காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து தொண்டர்களுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட அண்ணாமலைக்கு சாலையின் இருபுறமும் பொதுமக்கள், கட்சியினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பாளையங்கோட்டை ரோடு, குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, வ.உ.சி. சாலை, மார்க்கெட் சாலை, அந்தோணியார் ஆலயம் சந்திப்பு, வி.இ.ரோடு, கான்வென்ட் ரோடு வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு மதியம் 12.45 மணியளவில் சண்முகபுரம் கன்னி விநாயகர் கோவில் சந்திப்புக்கு வந்தார்.

அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

வளர்ச்சி திட்டங்கள்

தூத்துக்குடியில் கடந்த 1961-ம் ஆண்டு முத்து குளிக்கும் தொழிலாளர்கள் 1,500 பேர் இருந்தனர். ஆனால் தற்போது 50-க்கும் குறைவான தொழிலாளர்களே உள்ளனர். அவர்களுக்கு இன்னும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதேபோன்று இங்குள்ள உப்பள தொழிலாளர்களுக்கு அரசு சலுகைகளை வழங்கி ஊக்குவித்தாலே போதும். தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் பிடிக்கும்.

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்காக மத்திய பா.ஜனதா அரசு கடந்த 9 ஆண்டுகளில் வ.உ.சி. துறைமுகம் வளர்ச்சிக்கு ரூ.7 ஆயிரத்து 164 கோடி, தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே 332 கிலோ மீட்டர் தூர சாலை பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி, மதுரை-நாகர்கோவில்-தூத்துக்குடி சாலைக்கு ரூ.1,890 கோடி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.381 கோடி, தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முத்ரா கடனாக ரூ.3 ஆயிரத்து 144 கோடி வழங்கப்பட்டு உள்ளது. பாரத பிரதமர் வீட்டு வசதி கடன் திட்டத்தில் 21 ஆயிரத்து 911 குடும்பங்களுக்கு வீடு வழங்கப்பட்டு உள்ளது. சாலையோர வியாபாரிகள் 1 லட்சத்து 80 ஆயிரத்து 27 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

கடன் வாங்குவதில்முதல் மாநிலம்

தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.96 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளார். கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. தமிழகத்தில் சத்துணவில் அழுகிய முட்டை போடுவதால் மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மீனவர்களுக்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை தந்து உள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் ஒரு மீனவர் கூட மரணமடையவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் 5 விதமான பொய் பிரசாரங்களை கூறி மக்களை சந்திக்க வருவார்கள். அதனை முறியடிக்க நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம். 3-வது முறையாக பிரதமராக மோடி வர நாடு முழுவதும் 400 தொகுதிகளை வென்றால் போதாது. நாம் வெற்றியின் பக்கத்தில் வந்து விட்டோம். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க.வை வேரோடு சாய்த்து வீச வேண்டும். தூத்துக்குடியில் இருந்து அந்த மாற்றம் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூக்களை தூவி வரவேற்பு

முன்னதாக பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலைக்கு மக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர். ஏராளமானவர்கள் கோரிக்கை மனுக்களையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அசோகன், மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜகண்ணன், தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், துணைத்தலைவர் சுவைதர், வாரியார், மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் உஷாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்