கூடுதலாக குடிநீர் திட்டங்களை தொடங்க வேண்டும்

கூடலூரில் பராமரிப்பு செலவினத்தை கட்டுப்படுத்த கூடுதலாக குடிநீர் திட்டங்களை தொடங்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-10-31 18:45 GMT

கூடலூர், 

கூடலூரில் பராமரிப்பு செலவினத்தை கட்டுப்படுத்த கூடுதலாக குடிநீர் திட்டங்களை தொடங்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நகராட்சி கூட்டம்

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற ஒப்புதல் பெறுவதற்காக 76 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து ஊராட்சிகளில் நடத்தப்படுவது போல் நகர சபை நடத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என ஆணையாளர் தெரிவித்தார். அப்போது பெரும்பாலான கவுன்சிலர்கள், வார்டு மறுவரையறையின் போது எல்லைகள் சரியாக குறிக்கப்பட வில்லை. எனவே, எல்லைகளை வரையறுக்க வேண்டும். அடுத்த முறை வரையறுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார்.

பராமரிப்பு பணி

கவுன்சிலர் அனூப்கான்:-

கூடலூர் நகரில் பள்ளி மாணவர்கள் செல்லும் நேரத்தில் குப்பைகள் சேகரிப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்களை அதிகாலை நேரத்தில் நகர பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணியை தொடங்க வேண்டும்.

ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர்:- பரிசீலனை செய்யப்படும். கவுன்சிலர்கள் வெண்ணிலா, லீலா:- வார்டுகளில் குடிநீர் தொட்டி கிணறு பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுப்பதில்லை. இதனால் பணி நடக்கிறதா என தெரியவில்லை.

ஆணையாளர்:- இனிவரும் நாட்களில் தெரியப்படுத்தப்படும்.

கவுன்சிலர் வெண்ணிலா:- எனது வார்டில் குடிநீர் திட்டத்துக்காக மின் மோட்டார் கிடையாது. ஆனால், பராமரிப்பு செலவுக்காக பணம் வழங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆணையாளர்:- பழைய எண் கொண்ட வார்டில் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தீர்மான நகலில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கூடுதலாக குடிநீர் திட்டங்கள்

கவுன்சிலர்கள் வெண்ணிலா, அனூப்கான்:-

இரும்பு பாலம் குடிநீர் திட்டத்துக்காக பல லட்சம் செலவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செலவினத்தை கட்டுப்படுத்த ஹெலன் திட்டத்துடன் கூடுதலாக குடிநீர் திட்டங்களை தொடங்க வேண்டும். மேலும் சிக்மாயார் திட்ட வரைவு ஒப்புதலை அரசிடம் இருந்து விரைவாக பெற வேண்டும். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் தெரிவித்தார்.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி, பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை, மேலாளர் (பொறுப்பு) கிளாடிஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்