தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

கார்த்திகை தீபத்திருவிழாவின் 2-ம் நாளான நேற்று காலை தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானங்களிலும் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Update: 2022-11-28 17:06 GMT

கார்த்திகை தீபத்திருவிழாவின் 2-ம் நாளான நேற்று காலை தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானங்களிலும் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனி வந்தனர். இரவு 10 மணி அளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க சாமி வீதி உலா நடந்தது.

மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் முருகரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சின்ன அதிகார நந்தி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தங்க சூரியபிரபை வாகனம்

விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 10.30 மணி அளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்திலும், அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

மேலும் பக்தர்கள் சிலர் கரும்பில் தொட்டில் அமைத்து தங்கள் குழந்தையை அதில் அமர வைத்து நேர்த்தி கடனாக மாட வீதியில் வலம் வந்தனர். இதையடுத்து அவர்கள் தொட்டி அமைக்க பயன்படுத்திய கரும்புகளை உடைத்து அங்கிருந்தவர்களுக்கு வழங்கினர். இதேபோல 7-ம் நாள் விழாவான தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

வெள்ளி இந்திர விமானங்கள்

தொடர்ந்து இரவு 10 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி, இந்திர விமானங்களில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்